கரீபியன் பீரிமியர் லீக் ரி-20 தொடரின் 23ஆவது லீக் போட்டியில், ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணி 59 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
ட்ரினிடெட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இப்போட்டியில், ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணியும், சென்.கிட்ஸ்- நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணியும் பலப்பரீட்சை. நடத்தியுள்ளன .
இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்.கிட்ஸ்- நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, லெண்ட்ல் சிமோன்ஸ் 96 ஓட்டங்களையும், பிராவோ 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில், டோமினிக் ட்ரேக்ஸ் 2 விக்கெட்டுகளையும், கொட்ரேல் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 175 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சென்.கிட்ஸ்- நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணி 59 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, கிறிஸ் லின் 34 ஓட்டங்களையும், ஜோசுவா டா சில்வா 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில், ஸிகாண்டர் ராஸா 3 விக்கெட்டுகளையும், அகேல் ஹொசைன், கெர்ரி பியர், பிரவீன் தம்பே மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 63 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 7 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 96 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட லெண்ட்ல் சிமோன்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.






