2015 முதல் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஊடக சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் 2015 முதல் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தியிருந்தால் அவர்கள் தற்போது எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்க மாட்டார்கள்.
நல்லாட்சியின் பிரதானியான ரணில் விக்ரமசிங்கவையே நாடாளுமன்றுக்குச் செல்ல தகுதியற்றவர்கள் என மக்கள் நிராகரித்துள்ளார்கள். அதேநேரம் நிதியமைச்சராக அன்று இருந்த ரவி கருணாநாயக்கவையும் மக்கள் நிராகரித்துள்ளனர்.
மக்கள் தம்மை நிராகரித்துவிடுவார்கள் என்று முன்கூட்டியே தெரிந்துக்கொண்டுதான் முன்னாள் நிதியமைச்சரான மங்கள சமரவீர பொதுத் தேர்தல் போட்டியிலிருந்தே விலகினார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் எவ்வாறு இருந்தன என்பது தொடர்பாக இவற்றிலிருந்தே தெரிகிறது.
ஒரு தீவு நாட்டில் துறைமுகங்கள் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்தவை என சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை. சிங்கப்பூர் டுபாய் நாடுகளின் பொருளாதாரத்தின் தூணாகவே துறைமுகங்கள்தான் காணப்படுகின்றன.
நாம் சர்வதேசத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும். சர்வதேச ஒப்பந்தங்களை செய்ய வேண்டியுள்ளது என கூறினார்.






