வெகுநேரமாக காத்திருந்த சிறுவனுக்கு ராஜஸ்தான் வீரர் போல்ட் தான் அணிந்திருந்த டி-சர்ட்டை கழட்டி கொடுத்த நிகழ்வு ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய குவாலிபையர் இரண்டாவது போட்டி அகமதாபாத்தில் நேற்று நடந்தது.
இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் 4 ஓவர்கள் வீசி 28 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்த நிலையில் போட்டி முடிந்ததும் போல்ட் ஓய்வு அறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வேலிக்கு வெளியே சிறுவன் ஒருவன், ராஜஸ்தான் வீரர்களை காண வெகு நேரமாக காத்துக்கொண்டிருந்தான்.
இதனை கவனித்த போல்ட், தான் அணிந்திருந்த டி-சர்ட்டை கழற்றி கொடுத்து சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். சிறுவனும் தான் அணிந்திருந்த டி-சர்ட்டை கழற்றுவதை பார்த்த போல்ட், உன் டி-சர்ட் எனக்கு வேண்டாம் என கிண்டலாக கூறினார்.
இது தொடர்பான வீடியோவை பார்த்த ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்து, சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.






