இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்ற மக்களின் எழுச்சியினை அடுத்து முன்னாள் பிரதமர் மஹிந்த (Mahinda Rajapaksa) பதவி விலகினர்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலகல் என அடுத்தடுத்து மக்கள் மத்தியில் ராஜபக்சக்களின் அரசியல் பலத்தில் சரிவு ஏற்பட்டது.
இந்த நிலையில் மக்கள் எழுச்சி போராட்டம் மற்றும் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) பதவியேற்பு, புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமனம் என அடுத்தடுத்து அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றன.
இவ்வாறான நிலையில் அரசியல் ரீதியான அனைத்து செயற்பாடுகள் தொடர்பிலும் கடந்த சில மாதங்களாக மௌனம் காத்த ராஜபக்சவினர் தற்போது மீண்டும் தமது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் மக்கள் மத்தியில் தலைகாட்டாது ஒதுங்கியிருந்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தமக்கான ஆதரவை பெறும் செயற்பாட்டில் இறங்கியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மீள்பிரவேசமாக கருதப்படும் மக்கள் சந்திப்புக்கள் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவை வழங்கி வருகின்றனர்.






