அவுஸ்திரேலியாவில் சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக 19 ஆயிரத்துக்கு அதிகமான அகதிகள் நிச்சயத்தன்மையற்ற நிலையில் சிக்கியிருக்கின்றனர்.
குடும்பங்களை பிரிந்திருக்கும் அகதிகள் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க ஏதுவாக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனும் புதிய அறிவிப்பை அவுஸ்திரேலியா குடிவரவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
ஜூலை 19, 2013 முன்னதாக படகில் அவுஸ்திரேலியாவுக்கு வந்து நிரந்தர விசாக்களில் உள்ள அகதிகளின் குடும்ப மீள் ஒன்றிணைவு விசாக்களுக்கு குறைந்தளவிலான முன்னுரிமையே வழங்கப்படும் என்ற முந்தைய அமைச்சரின் உத்தரவில் ஆஸ்திரேலிய தொழிற்கட்சி அரசாங்கம் மாற்றம் கொண்டு வர இருக்கிறது.
படகு வழியாக வந்து அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவர்களுக்கும் தற்போது அவுஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் அல்லது பாதுகாப்பான புகலிட (Safe-Haven Enterprise) விசாக்களில் உள்ளவர்களுக்கும் இந்த கொள்கை மாற்றம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், தற்போது தற்காலிக விசாக்களில் உள்ள 19 ஆயிரம் அகதிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு விசாக்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை தொழிற்கட்சி அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.






