ஐ.பி.எல். ரி-20 தொடரின் 50ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.
அபுதாபியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக ஒரு ஓட்டத்தினால் சதத்தை தவறவிட்ட கிறிஸ் கெய்ல் 99 ஓட்டங்களையும், ராகுல் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
குறிப்பாக இப்போட்டியில் 8 சிக்ஸர்களை விளாசிய கிறிஸ் கெய்ல், ரி-20 கிரிக்கெட்டில் ஆயிரம் சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற மகத்தான சாதனையை பதிவுசெய்தார்.
ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பந்துவீச்சில், ஜொப்ரா ஆர்செர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 186 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, 17.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றியினை பதிவுசெய்தது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பென் ஸ்டோக்ஸ் 50 ஓட்டங்களையும் சஞ்சு சம்சன் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்துவீச்சில், கிறிஸ் ஜோர்தான் மற்றும் முருகன் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 26 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 6 பவுண்ரிகள் அடங்களாக 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பென் ஸ்டோக்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.






