கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மனைவியை உடனடியாக வீட்டுக்கு விடுமாறுகோரி நபர் ஒருவர் போராட்டம் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபர் தொலைபேசிக் கோபுரஹ்தில் ஏறி இவ்வாறு போராட்டம் நடத்தியுள்ளார். இதுகுறித்து மேலும் தெரியவருகையில்,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கரடிகுளத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான முத்துபாண்டி(38) என்பவரே இவ்வாறு போராட்டம் நடத்தியுள்ளார்.
இவருக்கும் இசைசெல்வி(23) என்பவருக்கும் திருமணமாகி ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த 8 நாட்களுக்கு முன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் இசைசெல்விக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது.
அப்போது நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் இசைசெல்விக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால், அவரை வீட்டுக்கு அனுப்ப மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. இதற்கு ஒத்துக் கொள்ள மறுத்த முத்துப்பாண்டி தனது மனைவியை வீட்டிற்கு அனுப்பகோரி கரடிகுளத்தில் உள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எவ்வாறாயினும் குறித்த நபரை வேறுதிசையில் சிந்திக்கவைத்த பொலிஸார் அவரை பாதுகாப்பாக மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.






