நாட்டில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை உள்ளடக்கிய 25 பொலிஸ் அதிகார பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, கொழும்பில் 17 பொலிஸ் பிரிவுகளும் கம்பஹாவில் 7 பொலிஸ் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, ஏனைய பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 12 பொலிஸ் பிரிவுகளுக்கு மேலதிகமாக 5 பொலிஸ் பிரிவுகள் இன்று தனிமைப்படுத்தப்படும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி புறக்கோட்டை, கோட்டை, மருதானை, கொம்பனித்தெரு, டேம் வீதி மற்றும் களனி ஆகிய பொலிஸ் அதிகார பிரதேசங்கள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த தனிமைப்படுத்தல் பகுதிகளில் இருந்து பொது மக்கள் வெளியேறவோ, உட்பிரவேசிக்கவோ முழுமையாக தடை விதிக்கப்பட்டள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்திய பகுதிகளில் தொடர்ந்தும் கொரோனா தொற்று அச்சறுத்தல் நிலவுவதன் காரணமாகவே இந்த பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அந்தப் பகுதியில் வாழும் பொது மக்கள் சுகாதார வழிமுறைகளை உரிய வகையில் பின்பற்றுவார்களாயின் விரைவில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளில் 7 பொலிஸ் பிரிவுகளைத் தவிர ஏனையவை நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய நீர்கொழும்பு, ஜாஎல, ராகமை, கடவத்தை, வத்தளை, பேலியகொடை ஆகிய 6 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவே காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், குருணாகலில் குருணாகல் மாநகரசபை எல்லை மற்றும் குளியாபிட்டி பொலிஸ் பிரிவு என்பன தனிமைப்படுத்தலிலிருந்து விடுக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று களுத்துறை மாவட்டத்தில் ஹொரணை, இங்கிரிய ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளும் வேகட படஹிர கிராம சேவகர் பிரிவு என்பன தனிமைப்படுத்திலிருந்து விடுவிக்கப்படுகின்றன.
மேலும் கேகாலை மாவட்டத்தில் ருவன்வெல்ல மற்றும் மாவனெல்லை ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுக்கப்பட்டுள்ளன என்பத குறிப்பிடத்தக்கது.






