தற்போதைய காலகட்டத்தில் எடை குறைய வேண்டும் என முயற்சிக்கும் பலரும் உடனடியாக செய்வது என்னவென்றால், சாப்பாட்டைக் குறைப்பார்கள், கடினமாக உடற்பயிற்சி செய்வார்கள்.
உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருக்கும் பலரும் தேர்ந்தெடுக்கும் பிரதான முயற்சிகள் இவை இரண்டும். சாப்பாட்டைக் குறைக்க விரும்பாதவர்கள், உடற்பயிற்சி செய்ய ஆர்வமில்லாதவர்கள் சிலர், குறுக்கு வழிகளை இணையத்தில் இன்றும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கான நற்செய்தி ஒன்றை பிரித்தானியாவில் இருக்கும் Westminster University வெளியிட்டுள்ளது. அந்த பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், பேய் படங்கள், மனதை பதைபதைக்க வைக்கும் படங்கள் பார்ப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில், சராசரியாக 90 நிமிடங்கள் இருக்கும் ஒரு பேய் படத்தை பார்க்கும்போது, உடலில் இருந்து 113 கலோரிகள் குறையும். 30 நிமிட நடை பயிற்சி மூலம் குறையும் கலோரிக்கு இது இணையானது. பயமுறுத்தும் படங்கள் ஆட்ரிலினைத் தூண்டி கலோரிகளை எரிக்க உதவுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும், சுவாசத்தில் ஏற்படும் மாற்றம் வளர்சிதை மாற்ற விகிதத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, கலோரி எரிப்பை தூண்டுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த ஆய்வில் சுமார் 10 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்கள் படம் பார்க்கும்போது சுவாசிக்கும் ஆக்ஸிஜன் அளவு, வெளியிடும் கார்பன்டை ஆக்சைடு அளவுகளை குறித்துக் கொண்ட ஆய்வாளர்கள், கடுமையான பதற்றம் மற்றும் மன அழுத்தத்தையும் ஆய்வுக்குட்படுத்தியுள்ளனர்.
இதில் கிடைத்த முடிவுகளைக் கொண்டு, குறித்த தகவலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இவற்றில் கூடுதலான சில ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.






