தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் என்று பல்வேறு எண்ணெய்களைப் பயன்படுத்தி வருகிறோம். இதேபோல் Tea tree oil என்பதையும் விவரம் அறிந்த சிலர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த Tea tree oil எதற்காக? யார் பயன்படுத்தலாம்? சரும நல மருத்துவர் தீபிகா லூனாவாட் பதிலளிக்கிறார்.
* Tea tree என்றதுமே உடனே ஒரு சந்தேகம் வரலாம். நாம் வழக்கமாக சாப்பிடும்/அருந்தும் தேநீருக்கான தேயிலையிலிருந்து Tea tree oil தயாராகிறதா என்று கேள்வி எழும். ஆனால், மருத்துவ உலகில் பயன்படுத்தப்படும் Tea Tree என்பதும், தேநீருக்காகப் பயன்படுத்தப்படும் Tea plant என்பதும் வேறுவேறு. இரண்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தேயிலை என்பது நாம் உட்கொள்ளக் கூடியது. ஆனால், Tea tree என்பது நச்சுத்தன்மை கொண்டது என்பதால் உட்கொள்ளக் கூடாது. மேற்புறமாக மட்டுமே பயன்படுத்த வேண்டியதாகும்.
* தேயிலை மர எண்ணெயானது அத்தியாவசியமான ஓர் எண்ணெய் வகையாக மருத்துவ உலகில் குறிப்பிடப்படுகிறது. இந்த எண்ணெயானது ஆஸ்திரேலியாவின் பூர்வீகத் தாவரமான Melaleuca Alternifolia என்னும் மரத்தின் கிளைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆகும்.
* Tea tree பல நூற்றாண்டுகளாக மருத்துவ காரணங்களுக்காக உபயோகிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்டது என்பதால், கடந்த 80 ஆண்டுகளில் மிகவும் அதிகமாக ஆஸ்திரேலிய மருத்துவத்துறையில் Tea tree oil பயன்படுத்துகிறார்கள்.
* பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை உள்ளிட்ட சருமத் தொற்றுநோய்கள், புரோட்டோசோல் தொற்றுநோய்கள் மற்றும் சளிச்சுரப்பியல் தொடர்பான பிரச்னைகளுக்கு எதிரான ஆன்டிமைக்ரோபியல் செயல்பாடுகளை Tea tree oil கொண்டுள்ளது. காயங்களை விரைந்து குணப்படுத்துதல், தோல் புற்றுநோயைப் பரவ விடாமல் கட்டுப்படுத்துதல் முதலான சிறப்பு தன்மைகள் இந்த எண்ணெய்க்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
* பரு, தோல்களில் ஏற்படும் சிவப்பு நிற தழும்புகள், பல நாட்களாக நீடிக்கும் ஈறு அழற்சி, முகத்தில் ஏற்படும் சிவப்பு நிற பருக்கள், சிரங்கு போன்றவற்றிற்கு இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம் என பல்வேறு மருத்துவ ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.
* Terpinen – 4 என்ற வேதிப்பொருள் தேயிலை மர எண்ணெயின் முக்கியக் கூறாகும். இந்த Terpinen – 4 பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகளுக்கு எதிராக செயல்படக் கூடியது. டெர்பன் 4-ல் உள்ள ஆன்டிமைக்ரோபியல் புண்கள் மற்றும் புற்றுநோய் கட்டிகள் ஏற்படாமல் தடுக்கிறது. இந்த எண்ணெய் பல்வேறு தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் அழற்சி நோய்களுக்குச் சிறந்த மருந்தாகத் திகழ்கிறது.
* தேயிலை மர எண்ணெயினை மரத்திலிருந்து எடுத்து அப்படியே பயன் படுத்துவது இல்லை. அதை குறிப்பிட்ட சதவிகிதத்துக்கு நீர்த்துப் போக செய்த பிறகே பயன்படுத்துகிறார்கள். சராசரியாக 5 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரையிலும் வேறு வேறு முறைகளில் நீர்த்துப் போக வைத்தே(Dilute) பயன்படுத்துகிறார்கள்.
* 5 சதவீத தேயிலை மர எண்ணெயைக் கொண்ட ஜெல் முகப்பருவைக் குறைக்க பயன்படுகிறது. இந்த ஜெல்லை முகப்பரு மீது தடவும்போது தோலில் உள்ள பாக்டீரியாக்கள், வீக்கம், அழற்சி மற்றும் அழற்சி அல்லாத பண்புகளைக் கட்டுப்படுத்தி முகப்பருக்களை மறைய செய்கிறது. தேயிலை மர எண்ணெய் முகப்பருவுக்கு மேலோட்டமான சிகிச்சையாக இருக்குமே தவிர, முழுமையான சிகிச்சையாக இருக்காது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
* பொடுகைப் போக்கவும் தேயிலை மர எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக சின்னச்சின்ன பொடுகை போக்குவதற்கு ஷாம்பூக்களில் தேயிலை மர எண்ணெய் 5 சதவீதம் சேர்க்கப்படுகிறது. அதே சமயம், மிதமான மற்றும் கடுமையான பொடுகு பிரச்னை இருந்தால் மருத்து வரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
* தோலில் ஏற்படும் ஒருவகையான பூஞ்சை நோய், கால் விரல்களில் ஏற்படும் பூஞ்சை நோய், நகங்களில் ஏற்படும் பூஞ்சை பாதிப்பு போன்ற பிரச்னைகளுக்கு தேயிலை மர எண்ணெய் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த எண்ணெயானது பூஞ்சை உயிரணுக்களின் வெளிப்புற அடுக்கை உடைத்து, அதன் செயல்பாட்டை சீர்குலைத்து பூஞ்சை நோய்கள் பரவாமலும், அவை வளர் வதையும் தடுக்கிறது.
* வாய் மற்றும் பிறப்புறுப்பு பகுதியைச் சுற்றி தொற்றுப்புண்களை ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் மருக்களை ஏற்படுத்தும் தொற்று ஆகியவற்றிற்குத் தேயிலை மர எண்ணெய் மூலம் சிறந்த சிகிச்சை அளிக்க முடியுமா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
* தேயிலை மர எண்ணெய் எரிச்சல் மற்றும் உடல் ஒவ்வாமை ஏற்படுத்தும். இந்த எண்ணெய் மற்ற அத்தியாவசிய எண்ணெய்களைப் போன்றே அதிக செறிவூட்டப்பட்ட தாவரவியல் சாறு என்பதால், தோல் அழற்சியை ஏற்படுத்தும். எனவே கவனமுடன் பயன்படுத்த வேண்டும்.
* தேயிலை மர எண்ணெயை அதிக ஒளி மற்றும் காற்று புகாதவாறு மூடி வைக்க வேண்டும். அதை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பயன்படுத்துவது அவசியம்.
* முகப்பருவிற்குப் பயன்படுத்தும்போது இதை சுத்தமான நீரில் கரைத்து உபயோகிக்க வேண்டும். இல்லையெனில் முகத்தில் உள்ள சிறு துவாரங்களில் அடைப்பு ஏற்படும்.
* தேயிலை மர எண்ணெயை சரும நல மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்துவதே பாதுகாப்பானது. பயன்படுத்துவதற்கு முன், அதன் வீரியத்தை அறிந்துகொள்வதற்காக கையின் மேற்புறத்தில் ஒரு சிறு சோதனை செய்து கொள்ளுங்கள்.






