மூளை, நரம்பு தொடர்பான நோய்களில் தலைவலிக்கு அடுத்தபடியாக அதிகம் பேரைப் பாதிப்பது, காக்காய் வலிப்பு நோய் ஆகும்.
மூளையில் ஏற்படும் சிக்னல் பிரச்சினையால் இந்த வலிப்பு நோய் ஏற்படுகிறது.
இந்த நோயால் 10 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு நீங்கள் நீண்ட காலம் மருந்துகள் எடுக்க வேண்டிய நிலை இருக்கும்.
இந்த நோய் இடம், பொருள், ஏவல் பார்க்காமல் திடீரெனத் தாக்கும். எனவே இவற்றின் அறிகுறிகளை முன்கூட்டியே தெரிந்து வைத்து கொள்வது அவசியமாகும்.
அந்தவகையில் இந்த வலிப்பு நோய் ஏன் உண்டாகிறது? இதன் அறிகுறிகள், தீர்வுகள் போன்றவை குறித்து தெரிந்துகொள்வோம்.
வலிப்பு வரும்போது என்ன நடக்கும்?
ஒருவருக்கு வலிப்பு வரும் போது கையும் காலும் வெட்டி வெட்டி இழுக்கும். அவர்களது வாயில் நுரை வெளியேறும்.
வெட்டும் போது நாக்கு பற்களுக்கு இடையில் மாட்டி கொள்ளும், வலிப்பு சில நிமிடங்கள் நீடிக்கும் வரை நாக்கு பற்களால் அழுத்தப்பட்டு ரத்தம் கசிவதும் உண்டு.
கண்களும் மேல் நோக்கியபடி இருக்கும். இது நீண்ட நேரம் இருக்காது. சில நிமிடங்களுக்கு பிறகு இந்த வலிப்பு வந்தவர்கள் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள். சிலர் சுயநினைவை இழக்கும் வகையில் வலிப்பை தீவிரமாக கொண்டிருப்பார்கள்.
ஏன் உண்டாகிறது
உடலில் தகவல்கள் பரிமாற்றம் செய்யும் போது செல்களுக்கிடையே மின்சாரம் மிகச்சிறிய அளவு உற்பத்தியாகிறது. இது மூளை மற்றும் நரம்பு செல்களுக்கிடையே உண்டாகிறது.
அப்படி உற்பத்தீயாகும் மின்சாரமானது அதிகமாக உற்பத்தி ஆகும் போது அதனால் மின் புயல் ஏற்பட்டு நரம்புகள் வழியே வேகமாக கடத்தப்படுகிறது.
அப்போது உடல் உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு கை மற்றும் கால்கள் உதறப்பட்டு வெட்டி இழுக்க செய்யும். இதுதான் வலிப்பு என்றழைக்கப்படுகிறது.
அறிகுறிகள் என்ன?
- திடீரென்று தலைவலியும் உடல் சோர்வும் அதிகமாக இருக்கும்.
- கைகளும் கால்களும் கட்டுப்பாடில்லாமல் தடுமாறும்.
- அதிக குழப்பமான மனநிலை உண்டாகும்.
- அறியாத அளவுக்கு பதற்றம், பயமும் இருக்கும். உடலில் வியர்க்கும்.
- காதுக்குள் யாரோ பேசுவது போன்ற குரல் கேட்கும்.
- பார்வை மங்கலாக தெரியும்.
- நடக்கவே முடியாது.
காரணங்கள் என்ன?
- விபத்து அல்லது அதிர்ச்சியான காயம் காரணமாக தலையில் அடிபட்டு இருந்தால்இது கை கால் வலிப்பை உண்டாக்கலாம்.
- மூளை வளர்ச்சி குறைபாடு பிறவியிலேயே பிறப்பதற்கு முன்பு இருந்தால் அல்லது மூளையில் கட்டி, ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல்,மூளைக்காய்ச்சல், முளை அழற்சி என மூளைக்கு சேதம் விளைவிக்கும் மூளை நிலைமைகள் கை- கால் வலிப்பை உண்டாக்கும்.
- பக்கவாதம் , டெட்டனஸ் காரணத்தாலும் வலிப்பு நோய் வரக்கூடும்.
- கர்ப்பிணியாக இருந்தால் கர்ப்பகாலத்தில் ரத்தகொதிப்பு கொண்டிருந்தால் பிரசவக்காலத்தில் வலிப்பு வரக்கூடும்.
- வயதானவர்களாக இருந்தால் அவர்கள் ரத்த பிளேட்லெட்டுகள் குறைவதும் அல்சைமர் நோயின் தாக்கமும் வலிப்பை உண்டாக்கலாம்.
- கட்டுப்படாத உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு , சிறுநீரகக் கோளாறுகள் போன்றவை வலிப்பு நோயை தூண்டக்கூடியவையே.
பரிசோதனை
ரத்தபரிசோதனையோடு மூளையின் மின்னோட்டத்தை அளவிடும் ஈ.ஈ.ஜி. சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் பெட் ஸ்கேன், ஸ்பெக்ட் ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் செய்யப்படும்.
சிகிச்சை
வலிப்பு நோய் வந்தவர்களுக்கான வயது, தன்மை போன்றவற்றை பொறுத்து மருந்துகள் அளிக்கப்படும்.
ஆரம்ப நிலையில் கவனித்து விட்டால் சிகிச்சை எளிமையாக இருப்பதோடு பலனும் கிடைத்துவிடும்.
வெகு சிலருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்படும். சிகிச்சையை தொடர்ந்து தவறாமல் எடுத்துகொள்ளும் போது 70% வலிப்பு மிண்டும் வராமல் தடுத்துவிட முடியும்.






