கண்டி மருத்துவமனை வீதியில் 51 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இதன்போது அந்த பெண்ணிடம் இருந்த 50 ஆயிரம் ரூபா பணத்தையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பெண் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் 9 வருடங்கள் சிறையில் இருந்து விடுதலையானவர் என தெரியவந்துள்ளது. இந்த நிலையிலேயே தற்போது குறித்த பெண் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்ற விடயம் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
சிறையில் இருந்த காலத்தில் மேலும் ஒரு பெண்ணுடன் தொடர்பை பேணியதன் மூலம் தற்போது இவர் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள விடயம் வெளியாகியுள்ளது.
இதேவேளை கம்பஹா மினுவங்கொடை பகுதியில் சட்டவிரோத புதையல் அகழ்வு நடவடிக்கைகளின் மூலமாக பெற்றுக்கொண்டதாக சந்தேகிக்கப்படும் பல தொல்பொருட்களுடன் நபரொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பல சிறிய மாணிக்கக்கற்கல், இரண்டு புத்தர் சிலைகள் மற்றும் செம்பு மற்றும் தங்கமுலாம் பூசப்பட்ட சிலைகள் போன்றன சந்தேக நபரிடமிருந்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் அப்பகுதியில் தற்காலிக வாடகை அறையொன்றில் வசித்து வருவதாகவும், குறித்த இடத்தில் பெண்களை பணத்திற்காக விற்பனை செய்யும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.






