காரைநகர் கடற்பரப்பில் உயிரிழந்த தமிழக மீனவரின் உடலை மீள பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றின் மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்படை ரோந்து கப்பல் இடித்ததால் நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்த தமிழகம் கோட்டைப்பட்டினம் மீனவர் ராஜ்கிரண் மரணத்தில் சந்தேகம் உள்ளதால், உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய
உத்தரவிடக் கோரிய வழக்கு உயிரிழந்தவரின் மனைவியான பிருந்தாவினால் சென்னை உயர் நீதிமன்றின் மதுரைக் கிளையில் கடந்த வாரம் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கினை ஆராய்ந்த நீதிமன்றம் உயிரிழந்த மீனவன் சுடப்பட்டு இறந்தாரா அல்லது கடலில் மூழ்கி இறந்தாரா என்பதை தெளிவு படுத்தும் வகையில் மறு உடற்கூராய்வு மேற்கொண்டு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
“புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகிய 3 பேரும் படகில் கடலில் அக்டோபர் 19-ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்த சமயம் இலங்கை கடற்படையின் படகு மோதியதில் ராஸ்கிரன் உயிரிழந்தார். இவ்வாறு 19ஆம் திகதி உயிரிழந்த மீனவரின் உடலம் 23 ஆம் திகதி கடல் வழியாக தமிழ் நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட சமயம் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் நீதிமன்ற உத்தரவின் பெயரில் ராஜ்கிரனின் உடல் மீண்டும் இந்தியாவில் உடல் கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதோடு இந்த அறிக்கை நவம்பர் மாதம் 24 ஆம் திகதி மன்றில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






