வரலாற்றில் என்றுமில்லாதவாறு பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் விவசாயிகள் எதிர்கொண்டுள்ள உரப் பிரச்சினை காரணமாக, இன்று முழு நாடுமே ஸ்தம்பிதம் அடையும் நிலைமைக்கு வந்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (22) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கமானது ஒவ்வொரு நாளும் வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுவதை போன்று விவசாயத்துறையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தீர்மானங்களை எடுத்து வருகின்றது.
அரசாங்கம் ஆரம்பத்தில் 94 ரூபாய்க்கு நாட்டு அரிசியை வழங்குவதாகக் கூறியது. 120 ரூபாய்க்கு சம்பா அரிசியை வழங்குவதாகக் கூறியது. 150 ரூபாய்க்கு கீரி சம்பாவை வழங்குவதாகக் கூறியது. எனினும் தற்போது என்ன நடந்துள்ளது?
இன்றைய நிலையில் அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து தீர்மானங்களும் வெற்றியளிக்கவில்லை.
அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்காக 10க்கும் மேற்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டது. அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்காக அவசரகால சட்டத்தையும் கொண்டுவந்தது. எனினும் அரசாங்கம் அந்த விடயத்தில் பெயிலாகிவிட்டது.
அரசாங்கம் எடுத்த தீர்மானங்களினால் ஒரு பக்கம் விவசாயத்துறையில் விவசாயிகள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். மறுப்பக்கத்தில் நுகர்வோர் பொருட்களின் விலை அதிகரிப்பால் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.
நாட்டு அரிசியானது 150 ரூபாய் வரை விலையுயர்ந்துள்ளது. ஒரு கிலோகிராம் சம்பா 200 ரூபாய்க்கும் மேல் விலையுயர்ந்துள்ளது.
ஒரு கிலோகிராம் கீரி சம்பா 250 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இது அரிசி விலையின் நிலைப்பாடு.
அதேபோன்று மரக்கறிகளின் விலைகளும் உயர்ந்துள்ளன.
இன்று நுகர்வோருக்கு ஒரு கிலோகிராம் போஞ்சியை 400 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் தக்காளி 500 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.
ஒரு கிலோகிராம் கரட் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மரக்கறிகளின் விலைகள் 500 ரூபாய் அல்லது அதனை தாண்டியுள்ளது.
வரலாற்றில் ஒருபோதும் இவ்வாறு பொருட்களின் விலைகள் அதிகரிக்கவில்லை.






