நியூ டயமன்ட் கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று (புதன்கிழமை) அதிகாலை 1 மணி முதல் கப்பலுக்கு புகை விசுறும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கருத்து கூறியுள்ளார்.
இதேவேளை, கப்பல் குறித்து மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு கடற்படையின் இடர்முகாமைத்துவ குழு இன்று நியூ டயமன்ட் கப்பலுக்கு செல்லவுள்ளது.
இதேநரம் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சமுத்திரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து பரிசோதிப்பதற்காக சென்ற விசேட குழுவினரால் கடல் நீர் மாதிரி கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த கடல் நீர் மாதிரி இன்று அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பப்படவுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த பரிசோதனையின் மூலம் சமுத்திரத்திற்கு உருவாகியுள்ள பாதிப்புகள் குறித்து உறுதியாக கூற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நியூ டயமன்ட் கப்பலை நேற்றைய தினம் மேலும் 9 கடல் மைல் தொலைவிற்கு நகர்த்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில், குறித்த கப்பல் 37 கடல் மைல் தொலைவில் காணப்படுவதாக கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு கிழக்கே சங்கமன்கண்டி இறங்குதுறையில் 38 கடல் மைல்கள் தொலைவில் எம்.டி. நியூ டயமன் என்ற எண்ணெய் தாங்கிக் கப்பல் கடந்த வியாழக்கிழமை காலை 8 மணியளவில் தீ விபத்துக்கு உள்ளாகியமை மேலும் குறிப்பிடத்தக்கது.






