உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று இன்றும் தான் உறுதிப்பட தெரிப்பதாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்கள் எங்கிருந்தாலும் எந்த மட்டத்திலும் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா மினுவாங்கொட பிரதேசத்தில் இன்று (12) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்துரைத்துள்ள அவர்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக கடந்த அரசாங்கம் நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில், தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் அதற்கு காரணமானவர்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தெரிந்தோ, தெரியாமலோ இவ்விடயத்தை மறைத்து அவ்வாறான தாக்குதல் இடம்பெறுவதற்கு காரணமாக இருந்தமை பாரிய குற்றமாகும்.
நான் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டாலும் எனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த சம்பவத்துக்குக் காரணமானவர்கள் அரசாங்கத்தில் இருந்தாலும் சரி, எமது கட்சியில் இருந்தாலும் சரி, சுதந்திர முன்னணியில் இருந்தாலும் சரி அவர்கள் குற்றவாளிகள்.
பேராயர் உள்ளிட்ட கிறிஸ்தவ மதத் தலைவர்களும், கிறிஸ்தவ மக்களும், நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதையே விரும்புகின்றார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






