பெருந்தோட்டத்துறையில் காணப்படும் கூலியடிமை, இன ஒடுக்குமுறை தொடர்பில் நடவடிக்கை எடுங்கள் என கொழும்பு ஐ.நா மனித உரிமை பிரதிநிதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெருந்தோட்ட மக்கள் நவீன கூலி அடிமை தொழிலாளர்களாகவும், தமிழ் சிறுபான்மை இனத்தவராகவும் இலங்கையில் ஒடுக்கப்படுகிறார்கள்.
இது தொடர்பில் சம்பந்தபட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பியுங்கள். ஐ.நா விசேட அறிக்கையாளர் டோமோயா ஒபோகாடாவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டால், அடுத்த ஐநா மனித உரிமை ஆணைகுழு கூட்டத்தில் இவ்விவகாரம் எடுத்தாளப்பட உரிய அவகாசம் கிடைக்கும் என கொழும்பு ஐ.நா அலுவலக வளாகத்தில் இருந்து செயற்படும், ஐநா மனித உரிமையாளரின் பிரதிநிதி, சிரேஷ்ட மனித உரிமை ஆலோசகர் ஜுஹன் பெர்னாண்டசுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அனுப்பியுள்ள அவசர மின்னஞ்சலில் கோரியுள்ளார்.
மனோ கணேசன் அனுப்பிய மின்னஞ்சலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, நவீன அடிமைத்தனங்கள், அதன் மூல காரணங்கள் மற்றும் தொடர் விளைவுகள் ஆகிய விவகாரங்களுக்கான, ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின், விசேட அறிக்கையாளர் டோமோயா ஒபோகாடா ஐநா மனித உரிமை ஆணைகுழுவின் கடைசி கூட்டத்துக்கு சமர்பித்த அறிக்கையின்படி பின்வரும் பாரதூரமான நிலைமைகள் பெருந்தோட்ட சமூகத்தின் மத்தியில் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.






