மாத்தறை – திஹாகொடவில் சிறுவன் ஒருவன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட உப காவல்துறை பரிசோதகரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்தவகையில் குறித்த அதிகாரியை நவம்பர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை பிரதான நீதவான் இசுரு நெத்திகுமார உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தன்மீதான குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், திஹகொட காவல்நிலையத்தின் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய இவர் தற்போது பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதன்படி, அந்த ஆணைக்குழுவின் மாத்தறை மாவட்ட அலுவலகத்தின் அதிகாரிகள் கொண்ட குழு சம்பவ இடத்துக்கு இன்றைய தினம் செல்லவுள்ளது.






