சமஷ்டி கட்மைப்பில் அதிகாரத்தை வழங்கினால் எமது மாகாணங்களை நாங்கள் அபிவிருத்தி செய்வோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலும் நகரங்களை காண முடியாது. நகரங்கள் இருந்தால் தான் நகரங்களை அபிவிருத்தி செய்யலாம்.
50 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு மாத்திரம் 50 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நகரங்கள் இல்லை. நகர அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் ஒருபகுதி கூட கிராமிய அபிவிருத்திக்கு ஒதுக்கப்படவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை, எழுவான் கரை ஆகிய பிரதேசங்கள் உள்ளன. எழுவான்கரை பிரதேசத்தில் நகரங்கள் இல்லை. 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆளும் கட்சிகளுக்கு வாக்களித்தால் தான் அபிவிருத்தி செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டது.
இவ்வாறான பின்னணியில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதேச அபிவிருத்திக்கு இரு பிரதிநிதிகளையும், அரசியல் உரிமைக்காக இரு பிரதிநிதிகளையும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். காணி அபகரிப்பு, அரசியல் கைதி விடுதலை, சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்து எமக்கு மக்கள் வழங்கிய பொறுப்பை முறையாக செயற்படுத்தி வருகிறோம்.
ஆனால் 2020 ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை. ஏனைய மாவட்டங்களில் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றுள்ளன. அபிவிருத்திக்காக தெரிவு செய்யப்பட்ட இரு பிரநிதிகளுக்கு செயற்திறன் இல்லையா என்பது தெரியவில்லை. மட்டக்களப்பில் படுவான்கரையும், எழுவான் கரையையும் இணைக்கும் பட்டிருப்பு பாலம் எனது பாட்டனார் சி.மு.இராசமாணிக்கம் இருந்ந காலத்தில் இருந்ததை போன்று இன்றும் அதே நிலையில் தான் உள்ளது.
கிராமங்களை நகரங்களாக மாற்றியமைக்க வேண்டுமாயின் கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். மண்டூர் பிரதேசத்தில் இருந்து பிரதான நகரத்திற்கு வருவதற்கு பாலம் ஒன்று இல்லாத காரணத்தினால் பெரும்பாலானோர் மண்டூர் பிரதேசத்தில் இருந்து வெளியேறியுள்ளார்கள்.






