கொரோனா அச்ச நிலைமைக் காரணமாக யாழ்ப்பாண நகரில் உள்ள சில கடைகள் சுகாதார துறையினரால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 25 ஆம் திகதி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளர் மற்றும் அதன் பணியாளர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குறித்த நபர்களிடம் முன்னெடுக்கபட்ட விசாரணைகளில், அவர்கள் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், அவர்கள் சென்றுவந்த கடைகள் மற்றும் உணவகங்கள், சிகையலங்கார நிலையம் என்பன சுகாதார அதிகாரிகளினால் மூடப்பட்டுள்ளது.
மேலும், தொற்றாளர்களுடன் தொடர்புடைய நபர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் வசிக்கும் பகுதிகளை அண்மித்தவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த நான்கு பேரும், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற பஸ்ஸில் பயணித்தவர்களை தனிமைப்படுத்தலில் இருக்குமாறும் சுகாதார தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த பஸ்ஸானது கடந்த 25 ஆம் திகதி இரவு 10 மணிக்கு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






