யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தையுடன் தொடர்புடைய மேலும் 13 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் இதனை எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.
அத்துடன் வட மாகாணத்தில் இதுவரையான காலப்பகுதியில் 68 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை கொவிட் அச்சுறுத்தல் காரணமாக வவுனியா தெற்கில் ஐந்து பாடசாலைகளும் யாழ்ப்பாணம் – வலிகாமத்தில் உள்ள சகல பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
அத்துடன் வவுனியா வடக்கில் புலியங்குளம் பகுதியில் உள்ள பாடசாலை இன்றுடன் மூடப்பட்டதாக வடமாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 1006 குடும்பங்களைச் சேர்ந்த 2749 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் பேலியகொடை கொத்தணி உருவானதன் பின்னர் 604 பேர் இதுவரையில் கொவிட் 19 நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.






