சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே ஆயுத வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மாளிகாவத்தை போதிராஜாரம விஹாரையின் விஹாராதிபதி ஊவாதென்னே சுமன தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்து இருக்கிறார்.
இதே போல கடந்த ஆண்டு குழந்தைகள் உட்பட எட்டு தமிழர்களை படுகொலை செய்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனில் ரத்னாயக்கவையும் கோட்டாபய ராஜபக்சே பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்து இருந்தார்.
அதே நேரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை சுட்டுக்கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கும் பொது மன்னிப்பு வழங்குவதறகான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
இதேவேளை கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் தண்டனை கைதியாக தடுத்து வைக்கப்பட்டு இருந்த பௌத்த மத குருவான ஞானசார தேரரை சந்தித்து பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்து இருந்தார்.
அதே போல இவோன் ஜோன்சன் என்ற இளம் பெண்ணை கொலை செய்த வழக்கின் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்த ஜுட் ஷரமந்த ஜெயமஹா என்கிற இளைஞரையும் பொது மன்னிப்பு வழங்கி மைத்திரிபால சிறிசேன விடுதலை செய்து இருந்தார்.
ஆனால் சந்திரிகா குமாரதுங்க அம்மையார் கடந்த 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கையின்போது அவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்படும் ரகுபதி சர்மா எனப்படும் இந்து மதகுரு ஒருவருக்கு 300 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பயங்கரவாத சட்டத்தின் கீழ் பலவந்தபடுத்தி குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு இருந்த போதும் நீதிமன்றம் அதனை கருத்தில் கொள்ள வில்லை. ரகுபதி சர்மா அவர்கள் இன்றைக்கும் தண்டனை அனுபவித்து வருகிறார்
உண்மையில் சிங்கள பௌத்த அரசியலின் அடிப்படைக் கருத்தியலை இலங்கையின் நீதிமன்றங்கள் என்றைக்கும் கேள்விக்கு உட்படுத்தியதில்லை என்பதற்கும் மாறி மாறி ஆட்சிக்கு வரும் தென்னிலங்கை ஆட்சியாளர்களிடமும் அப்பாவி தமிழ் மக்களுக்கு நீதி செய்ய வேண்டும் என்கிற அரசியல் விருப்பும் என்றைக்கும் இருந்ததில்லை என்பதற்கும் மேற்குறித்த சம்பவங்களே சாட்சி என பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.






