உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு முன்னர், தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரான இன்சாப் அஹமட் என்பவரால் நாட்டுக்கு தருவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 6,000 வாள்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
குறித்த விசாரணைகளின் நிலைமையை, பாதுகாப்பு செயலர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் கேட்டறிந்து நீதிமன்றுக்கு அறிவிப்பதாக சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.
சட்ட மா அதிபர் சார்பில் அரசின் சிரேஷ்ட சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேரா இதனை மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு இன்று அறிவித்தார்.
நாட்டுக்கு தருவிக்கப்பட்டதாக கூறப்படும் 6,000 வாள்கள் தொடர்பில் விசேட விசாரணைகளைகோரி, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த ரிட் மனு இன்று (05) பரிசீலனைக்கு எடுக்கப்பட்டபோதே கலாநிதி அவந்தி பெரேரா இதனை அறிவித்தார்.
இந்த மனுவானது மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயதுன்ன கொரயா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இம்மனு மீதான மேலதிக பரிசோதனைகள் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.






