உடற்தகுதி தேர்வில் தகுதிப்பெற்றுள்ள இந்திய நட்சத்திர வீரர் ரோகித் சர்மா, அவுஸ்திரேலியா செல்ல பிசிசிஐ பச்சைக்கொடி காட்டியுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்திய அணி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை முடித்து, தற்போது மருத்துவ ரீதியாக உடற்தகுதியுடன் உள்ளார்.
ஐபிஎல் தொடரின் போது காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக மீளாத காரணத்தால், உடல்தகுததியை நிரூபிக்க 19ம் தேதி முதல் ரோகித் சர்மா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்றார்.
பேட்டிங், பீல்டிங் மற்றும் விக்கெட்டுகளுக்கு இடையில் ஓடுவது தொடர்பான அவரது திறன்களை வெவ்வேறு அளவீடுகளில் சோதித்த என்.சி.ஏ மருத்துவக் குழு, ரோகித் சர்மாவின் உடல் தகுதி குறித்து திருப்தி அடைந்தது.
ரோகித் சர்மாவின் உடல் தகுதி திருப்திகரமாக உள்ளது, இருப்பினும், அவர் சகிப்புத்தன்மையுடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.
அவர் தனிமைப்படுத்தப்படும் இரண்டு வார காலத்திற்கு பின்பற்ற வேண்டிய ஒரு விரிவான திட்டம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தலுக்கு பிறகு ரோகித் சர்மாவின் உடற்தகுதியை அறிய இந்திய அணியின் மருத்துவக் குழு அவரை மறு மதிப்பீடு செய்யவார்கள்.
அதற்கேற்ப ரோகித் சர்மா பார்டர்-கவாஸ்கர் டிராபியில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
பார்டர்-கவாஸ்கர் டிராபியில் அவுஸ்திரேலியா-இந்தியா அணிகள் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 17ம் தேதி அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.
அவுஸ்திரேலியாவில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்பதால், ரோகித் சர்மா கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.






