கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆண்டின் முதலாவது டென்னிஸ் தொடரான அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர், கொரோனா வைரஸ் தொற்றால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜனவரி மாதம் நடைபெறவிருந்த இந்த தொடர், தற்போது பெப்ரவரி மாதம் நடைபெறும் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்ரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில், அந்நாட்டுக்கு செல்பவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும், அங்கு 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்.
இந்தநிலையில் மெல்பேர்ன் நகரில் ஜனவரி 18ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்ட அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர், பெப்ரவரி 8ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் ஜனவரி 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை கட்டார் தலைநகர் டோஹாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






