கோஹ்லி தலைமையில் விளையாடும் இந்திய அணிக்கு டிசம்பர் 19-ஆம் திகதி ஒரு மறக்க முடியாத நாளாக மாறி வருவதாக ரசிகர்கள் இணையத்தில் குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 36 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஒரு பலம் வாய்ந்த அணி இப்படி சுருண்டது, இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதே டிசம்பர் 19-ஆம் திகதி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2016-ஆம் ஆண்டு ஒரு மிகப் பெரிய சாதனை படைத்தது.
சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 759/7 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி ஒரு இன்னிங்ஸில் அடித்த அதிகபட்ச சாதனையாக இது பதிவானது.
டிசம்பர் 19-ஆம் திகதி 2016-ஆம் ஆண்டு ஒரே இன்னிங்ஸில் அதிக ஓட்டங்களை பதிவு செய்த இந்திய அணி, அதே நாளில் நான்கு வருடங்கள் கழித்து ஒரு இன்னிங்ஸில் மிகக் குறைவான ஓட்டங்களை பதிவு செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு போட்டிகளும் நடைபெற்றபோது கோஹ்லி தான் அணியின் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.






