இந்திய மாநிலம் தெலங்கானா, ஹைதராபாத்தில் 6 வயதுச் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபர், ரயில்வே தண்டவாளத்தில் உடல் சிதறிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
ஹைதராபாத்தில் சயாத்பாத் பகுதியில் உள்ள சிங்கரேனி காலனியில் 6 வயதுச் சிறுமியைக் கடந்த 9-ஆம் திகதி முதல் காணவில்லை.
அதன்பின் மறுநாள் அந்தச் சிறுமியின் உடல் பக்கத்து வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்குப் பின் பக்கத்து வீட்டுக்காரர் பல்லகொண்ட ராஜு தலைமறைவானார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள பல்லகொண்ட ராஜுவைப் பிடிக்க ஹைதராபாத் பொலிஸார் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர், அவர் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதியும் அளிக்கப்படும் என அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஜனாகான் மாவட்டத்தில் கான்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ரயில்வே இருப்புப் பாதையில் உடல் சிதறிய நிலையில் சடலம் கிடப்பதாக பொலிஸாருக்கு அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை காலை தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, பொலிஸார் உடலைக் கைப்பற்றி, தேடப்பட்டு வந்த பல்லகொண்ட ராஜுவின் உடலில் இருக்கும் அடையாளங்களையும், உறவினர்களை வைத்தும் அடையாளம் கண்டதில் ரயில் தண்டவாளத்தில் கிடந்தது பல்லகொண்ட ராஜுவின் உடல் எனத் தெரியவந்தது.
இது தொடர்பாக தெலங்கானா காவல் டிஜிபி ட்விட்டரில் தகவலை வெளியிட்டார்.
#AttentionPlease : The accused of “Child Sexual Molestation and murder @ Singareni Colony, found dead on the railway track, in the limits of #StationGhanpurPoliceStation.
Declared after the verification of identification marks on deceased body. pic.twitter.com/qCPLG9dCCE— DGP TELANGANA POLICE (@TelanganaDGP) September 16, 2021
இதற்கிடையே, சிறுமி கொலை குறித்து தெலங்கானா தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மல்லா ரெட்டி அளித்த பேட்டியில், “சிறுமி பலாத்காரக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி சிக்கினால், அவரை என்கவுன்ட்டரில் கொல்ல வேண்டும்” எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.






