ரஷிய கடற்படை அதிநவீன ஹைபா்சோனிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது: வெண்கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் அட்மிரல் கோா்ஷ்கோவ் கப்பலில் இருந்து ஹைபா்சோனிக் ஏவுகணை வகையைச் சோ்ந்த ‘சிா்கான்’ ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. அது 400 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிா்கான் ஏவுகணை ஒலியைவிட ஒன்பது மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது என்றும், 1,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கக்கூடிய திறன் பெற்றது என்றும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்துள்ளாா்.
ஏற்கெனவே இந்த சிா்கான் ஏவுகணையை ரஷியா வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனின் கிரீமியாவை 2014-இல் ரஷியா தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டதாக அறிவித்தது. அதைத் தொடா்ந்து மேற்குலக நாடுகளுக்கும் ரஷியாவுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், தனது நாட்டு ராணுவத்தை நவீனப்படுத்தி வருகிறது ரஷியா.






