விளாதிமிர் புதினுடனான அதிபர் ஜோ பைடனின் அரிய சந்திப்பிற்குப் பிறகு, உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு அச்சம் தொடர்பாக ‘வலுவான நடவடிக்கை’ எடுக்க தயாராகி வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
செவ்வாய்க்கிழமை காணொளி அழைப்பு வழியாக நிகழ்ந்த இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லீவன், “வாஷிங்டன் வரும் வாரங்களில் தேவைப்பட்டால் மேற்கொள்ள வலுவான எதிர்வினைக்குத் தயாராகி வருகிறது” என பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், “2014-ல் செய்யாதவற்றுக்கும்கூட, இப்போது தயாராக உள்ளோம். இந்தப் பிரச்சனையில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன என்பதில் அதிபர் தெளிவாக இருக்கிறார்” என்று கூறினார். உக்ரைன் மீது தாக்குதலை முன்னெடுத்தால், அமெரிக்கா எதிர்வினை ஆற்றும் என பைடன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த எதிர்வினை பொருளாதார ரீதியாக மட்டுமின்றி மற்ற வகைகளிலும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 90,000-க்கும் அதிகமான ரஷ்ய படைகள் உக்ரைன் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. ரஷ்யாவோ, உக்ரைனை தாக்கமாட்டோம் என கூறியுள்ளது. பைடன் மற்றும் புதின் கடைசியாக சுவிட்சர்லாந்தில் கடந்த ஜூன் மாதம் சந்தித்தனர். ஆனால், பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






