ஜனாதிபதி புடின் மற்றும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இடையிலான அமைதி பேச்சுவார்த்தை தொடர்பான சந்திப்பு ஏற்பாடு செய்யப்படும்.
உக்ரைனிய தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் நீடிப்பதில் எந்தவொரு தடையும் இல்லை.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே சந்திப்பை ஏற்பாடு செய்ய இருப்பதாக துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையே ஏற்பட்ட போர் நடவடிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே துருக்கி இரண்டு நாடுகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது.
துருக்கி, ஐக்கிய நாடுகள் சபை, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகியவற்றிற்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே உக்ரைனில் தேங்கி நின்ற பல மில்லியன் டன் தானியங்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
ஆனால் தற்போதைய சூழல் உக்ரைன் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே அணு ஆயுத போரை தொடங்கும் அளவிற்கு சிக்கலடைந்துள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமையான இன்று அஜர்பைஜானில் இருந்து திரும்பிய துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் செய்தியாளர்களை சந்தித்து, விரைவில் புடின் மற்றும் ஜெலென்ஸ்கி இருவருடனும் தொலைபேசி உரையாடல் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
அதன் பிறகு ரஷ்யா மற்றும் உக்ரைனிய சகாக்களான விளாடிமிர் புடின் மற்றும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்து, பிராந்திய அமைதியை எட்டுவது குறித்து பேச வைக்கப்படும் என தெரிவித்தார்.






