ஆசியான் உச்சி மாநாட்டில் வியட்நாம், கம்போடியா பிரதமர்களை சந்தித்து பேசிய ஜஸ்டின் ட்ரூடோ
உலகெங்கிலும் கண்ணிவெடிகளை அகற்றும் முயற்சிகள் குறித்து கம்போடியா பிரதமருடன் பேசினேன் – ஜஸ்டின் ட்ரூடோ
கம்போடியாவில் தொடங்கியுள்ள ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கம்போடியா மற்றும் வியட்நாம் தலைவர்களுடன் உரையாடினார்.
ஆசிய நாடான கம்போடியாவில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் உச்சி மாநாடு நடந்து வருகிறது. உலகத் தலைவர்கள் பலர் இதில் கலந்துகொண்டுள்ளனர். அவர்களுடன் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இணைந்து கொண்டார்.
கம்போடியாவின் பிரதமர் ஹன் சென்னிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, மாநாட்டினை ஏற்பாடு செய்ததற்கு நன்றி தெரிவித்தார். அத்துடன் அவருடன் உரையாடிய ட்ரூடோ, கம்போடியா மட்டுமன்றி உலகெங்கிலும் கண்ணிவெடிகளை அகற்றும் முயற்சிகள் குறித்தும், இந்தோ-பசிபிக் பகுதியில் தனது சகாக்களுடன் இணைந்து கனடா பணியாற்றுவது குறித்தும் பேசினார்.
அதனைத் தொடர்ந்து வியட்நாம் பிரதமர் மின்ஹ் சின்ஹை சந்தித்த ட்ரூடோ, கனடா-வியட்நாம் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வழிகள், இரு நாடுகளிலும் நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்டவை குறித்தும் விவாதித்துள்ளார்.






