இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் அதிகாரப் பகிர்வு வழங்கப்படுமாக இருந்தால் சிறிலங்கா அரசு வடக்கு மாகாண அதிகாரத்தை தமிழர்களுக்கும் கிழக்கு மாகாண அதிகாரத்தை முஸ்லீம்களுக்கும் வழங்குவதற்கே தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
அதாவது வடக்கு இந்தியாவுக்கு கிழக்கு சீனாவுக்கு என்பதே அதன் அர்த்தமாக உள்ளது. சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இனப்பிரச்சினைத் தீர்வு சம்பந்தமாக பேசும் போது மிக தெளிவாக “வடக்கு மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்க தயார்” என அடிக்கடி கூறிவருகிறார்.
உண்மையில் இதன் ஊடாக சிறிலங்கா அரசு பிராந்திய நாடுகளை கையாள்வதற்கு தயாராகி வருகிறது. மிக முக்கியமாக இந்திய இலங்கை ஒப்பந்தம் ஊடாக உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச் சட்டத்தை கூட நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசு தயாராக இல்லை.
சிறிலங்கா அரசு இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் கூட இந்தியா, சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் நாடுகளை திருப்திப்படுத்தவே முனைகிறது. அதாவது இந்தியாவை முழுமையாக நம்புவதற்கு சிறிலங்கா சிங்கள அரசு தயாராக இல்லை. அதேவேளை இந்தியாவை நேரடியாக எதிர்க்கவும் தயாராக இல்லை.
இவ்வாறான சூழ்நிலையில் வடகிழக்கு மாகாணங்களை சீனா இந்தியா மோதும் களமாக மாற்றுவதற்கான தந்துரோபாய நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசு ஈடுபட்டு வருகிறது. 2009 ம் ஆண்டிற்கு முன்னர் இந்தியா, சீனா,பாகிஸ்தான், அமெரிக்கா, மேற்குலக நாடுகளை விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தை காரணம் காட்டி ஒரு புள்ளியில் இணைத்து இலங்கை தமிழர்களின் போராட்டத்தை அழித்தொழித்த சிறிலங்கா அரசு தற்போது சீனா, இந்தியா, பாகிஸ்தான் இடையிலான முரண்பாடுகளை பயன்படுத்தி தமிழர்களின் அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப் பகிர்வை பலவீனப்படுத்துவதற்கு தயாராகி வருகிறது.
இனப்பிரச்சினை தீர்வுக்கு மாவட்ட சபைகளை வழங்கத்தயார் என அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ள நிலையில் அவர் மாகாண சபைக்கான அதிகாரங்களை குறைப்பதற்கும் இந்தியாவின் 13 வது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்யவதற்காகவே மாவட்ட சபைகளுக்கு அதிகாரங்களை வழங்க முடியும் என்று கூறியுள்ளார்.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட வடகிழக்கு மாகாணங்களின் இணைப்பை துண்டித்தவர்கள் கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் அரசியல் தலைவர்களுக்கே கூடிய அதிகாரங்களை, அமைச்சுப் பதவிகளை வழங்கி கிழக்கில் உள்ள தமிழர்களை பலவீனப்படுத்தி வந்ததோடு கிழக்கில் தமிழர்களின் இன விகிதாசாரம் உட்பட அபிவிருத்தி திட்டங்கள், அரச உயர் பதவிகள் என அனைத்திலும் முஸ்லீம்களின் ஆதிக்கமே அதிகரித்திருந்தது.
கிழக்கை ஒரு இஸ்லாமிய தேசமாக அடையாளப்படுத்தி ஜிகாத் போதனைகள் ஊடான பல இஸ்லாமிய மதவாத, தீவிரவாத போக்கை உடைய முஸ்லீம் சமூகத்தை வளர்த்தும் விட்டிருந்தனர். இவ்வாறான சூழ்நிலைகளுக்கு காரணம் கிழக்கு மாகாணத்தை பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகள் ஊடாக கையாண்டு வரும் சீனா கிழக்கை இந்தியாவுக்கு எதிரான பகுதியாக மாற்றுவதில் முன் நின்று செயற்பட்டு வருகிறது.
இதற்காக பல இரகசிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இலங்கை இனப் பிரச்சினைக்கான தீர்வு மட்டும் அல்ல இலங்கையில் அரசியல் ரீதியான அதிகாரங்களையும் கைப்பற்றுவதற்கு இந்தியாவுக்கு போட்டியாக சீனா மிக மதிநுட்பத்துடன் நீண்ட காலமாக செயற்பட்டு வந்துள்ளது. இதற்கு சிறிலங்கா அரசு தனது பூரண ஆதரவை வழங்கி வந்துள்ளது என்பதுதே உண்மை.






