நாங்கள் பிரித்தானிய கலாச்சாரத்தையும் அதன் ஆற்றலையும் விரும்புகிறோம், ஆனால், நீங்கள் ஏன் அப்படியில்லை என பிரித்தானியர்கள் முன் கேள்வி ஒன்றை வைக்கிறார்கள் பிரான்ஸ் நாட்டவர்கள் சிலர்.
குறிப்பாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள மக்கள் பிரெக்சிட் தொடர்பில் பிரித்தானியா எடுத்துவரும் நடவடிக்கைகளால் மன வருத்தம் அடைந்துள்ளார்கள்.
பாரீஸிலுள்ள Boulinier என்ற புத்தகக்கடை, 1845 முதலே ஆங்கில புத்தகங்களை குவித்துவைத்துள்ளது. அங்கு வந்த வாடிக்கையாளர்களான பிரான்ஸ் நாட்டவர்கள் சிலர்,
பிரெக்சிட் தொடர்பில் ஒப்பந்தம் ஏதும் முடிவாகாவிட்டால், பிரான்ஸ் மீனவர்கள் தங்கள் கடல் பரப்பில் மீன் பிடிப்பதைத் தடுப்பதற்காக, பிரித்தானியா ஆயுதம் ஏந்திய கப்பல்களை தங்கள் கடல் எல்லைக்கு அனுப்பும் என்ற செய்தியை நாளிதழ்களில் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
பிரித்தானியா பொதுவாக இப்படி நடந்துகொள்ளாது என்று கூறும் Didier Aubert (72) என்பவர், நட்பு பாராட்டவேண்டிய நாகரீக நாடுகள் இந்த அளவுக்கு இறங்கிப்போகக்கூடாது என்கிறார்.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகிறது, அதை என்னால் நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது என்று கூறும் Aubert, பிரான்சும் அப்படி செய்வதைக் கூட நான் விரும்புகிறேன், ஆனால், இந்த பிரெக்சிட் நாடகத்தை தாங்க இயலவில்லை, நான் பெரிதும் மதிக்கும் பிரித்தானியர்கள் சிலர் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதே புரியாமல் இருக்கிறார்கள் என்கிறார்.
ஒரு ஒப்பந்தம் நிறைவேறவில்லை என்பதால் பிரித்தானியா இராணுவத்தைக் கொண்டு அச்சுறுத்தும் என யார் நினைத்தார்கள் என்கிறார் Aubert.
எனக்கு இங்கிலாந்து என்றால் அப்படி ஒரு பிரியம் என்று கூறும் Redouane Belkacem (16) என்ற மாணவர், அதன் ஸ்டைலும் ஆற்றலும் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்கிறார்.
பிரெக்சிட்டால் தடையில்லா போகுவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் கவலையடைந்துள்ள Lilas Farré (18) என்னும் மாணவர், என் போன்ற மாணவர்களுக்கு இது பெருங்குழப்பத்தை ஏற்படுத்தும் என்கிறார்.
மீன் பிடித்தல் என்ற விடயத்தை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பெரிய பிரச்சினையாக பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அதெல்லாம் ஒரு பிரச்சினையே அல்ல, எங்களுக்கு வேறு மீன் இருக்கிறது என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.
பிரித்தானியாவைப் போலவே பிரான்சிலும் கொரோனாவால் பொருளாதாரம், கலாச்சாரம், சமூகம் என பல பாதிப்புகள் உள்ளன என்கிறார்கள் பிரான்ஸ் நாட்டவர்கள்.
பிரெக்சிட் என்பது பொருளாதாரம் தொடர்பான ஒரு விடயம், அது கலாச்சாரம் தொடர்பானது அல்ல என தான் நம்புவதாக தெரிவிக்கும் Imad Attahiri (34) என்னும் சமூக சேவகர், முடிவெடுக்க வேண்டியது பிரித்தானிய மக்கள்தான் என்கிறார்.






