உலகமே தற்போது திரும்பிப் பார்க்கும் பெண்மணியாக இருப்பவர் அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹரிஸ். கமலா ஹாரிஸின் தந்தை டொனால்டு ஹாரிஸ், ஜமைக்காவைச் சேர்ந்தவர். தாய் ஷியாமளாவின் பூர்வீகம் சென்னை. அவரின் உறவினர்கள் பலரும் தற்போதுவரை சென்னையில்தான் வசித்து வருகின்றனர். கமலாவின் சித்தியும் மருத்துவருமான சரளா கோபாலன், சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார். கமலா ஹாரிஸின் பர்சனல் பக்கங்கள் குறித்துப் பகிரும் சரளாவின் முகத்தில் மகிழ்ச்சிப் பூரிப்பு.
என் உடன் பிறந்த அக்கா ஷியாமளாதான் கமலா ஹாரிஸின் அம்மா. அக்கா 18 வயசுல மேற்படிப்புக்காக அமெரிக்கா போனாங்க. பிறகு, அங்கேயே கல்யாணம் செய்துகிட்டு, அமெரிக்காவிலேயே நிரந்தரமா தங்கிட்டாங்க. புற்றுநோய் ஆராய்ச்சிக்கான முனைவர் பட்டம் பெற்றிருக்கும் அக்கா, அதே துறையில் ஆராய்ச்சியாளரா வேலை செய்தாங்க. அக்காவுக்கு கமலா, மாயானு ரெண்டு பெண் பிள்ளைகள். கமலா பிறந்து வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில்தான். நடுவுல கொஞ்ச காலம் மட்டும் கனடாவில் கமலா வேலை செஞ்சார். பிறகு இப்பவரை அமெரிக்காவில்தான் வசிக்கிறார்.
கமலாவும் அவளின் சகோதரியும் வழக்கறிஞர்கள். அவங்கவங்க துறையில் பிஸியா வேலை செய்யறதால, அவங்க எல்லோருமே எப்பவாவதுதான் சென்னை வருவாங்க. 5 வருஷத்துக்கு ஒருமுறை அவங்க நம்மூர் வந்தாலே ஆச்சர்யம்தான். ஆனா, வந்தா சில நாள்கள் தங்குவாங்க. சென்னையின் முக்கியமான இடங்களையும் சொந்த பந்தங்களையும் பார்த்து சந்தோஷப்படுவாங்க. நானும் நேரம் கிடைக்கும்போது அமெரிக்கா போய் அவங்க வீட்டுல தங்குவேன்” என்பவர், கமலா ஹாரிஸுக்குப் பிடித்த சில விஷயங்களைப் பற்றிப் பேசினார்.
1999-ல் எங்க அப்பாவுக்கு சதாபிஷேகம் நடந்துச்சு. அப்போ என்னோட அக்கா தன்னோட குடும்பத்துடன் சென்னை வந்து தங்கின நாள்கள் மறக்க முடியாதவை. அப்போ கமலா எங்க குடும்ப வேலைகளை ஆர்வமுடன் செய்தது, நம்ம பாரம்பர்ய விஷயங்களைக் கத்துக்கிட்டதெல்லாம் எனக்கு இன்னும் பசுமையா நினைவிருக்கு. கமலா சென்னை வந்தா எல்லோரும் ஒண்ணா மாமல்லபுரம் போவோம். கமலாவுக்கு நம்மூர் உணவு வகைகள் பிடிக்கும். அதிலும், வத்தக்குழம்பு, ரசம்தான் அவளோட ஃபேவரைட் டிஷ்.
அக்காவுக்குத் தமிழ் தெரியும். அவ்வப்போது மகள்களுக்கும் தமிழ் சொல்லிக்கொடுத்தார். ஆனா, தொடர்ந்து பேசிப் பழகாததால கமலாவுக்குத் தமிழ் சரளமா தெரியாது. எங்களோடு பெரும்பாலும் இங்கிலீஷ்லதான் பேசுவார். கமலாவுக்குப் படிப்பில் ரொம்ப ஆர்வம். தன்னைச் சுத்தி பாசிட்டிவ்வான சூழல் இருப்பதையே விருப்புவார் என்று தெரிவித்தார் சித்தி.






