சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு, வெள்ளம், மின்னல் தாக்குதல் மற்றும் கடுங்காற்று காரணமாக 17 மாவட்டங்களில், 60,264 குடும்பங்களை சேர்ந்த 212,060 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்தங்களில் சிக்கி 25 பேர் மரணமடைந்ததுடன், 13,671 குடும்பங்களை சேர்ந்த 50,166 பேர் பாதுகாப்பான இடங்களிலும் உறவினர், நண்பர்களின் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பதுளை, நுவரெலியா, மாத்தளை, கம்பஹா, முல்லைத்தீவு, கொழும்பு வவுனியா, மன்னார், இரத்தினபுரி, களுத்துறை, புத்தளம், அனுராதபுரம், யாழ்ப்பாணம், காலி, கேகாலை, கிளிநொச்சி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலேயே அனர்த்தங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்திருந்தார்.
அதிகளவான பாதிப்புக்கள் புத்தளம் மாவட்டத்தில் பதிவாகியுள்ள நிலையில் குறித்த மாவட்டத்தில் இதுவரை 38,298 குடும்பங்களை சேர்ந்த 132,375 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாவட்டத்தில் 23 வீடுகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1,229 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.






