2021ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்காக வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் வீரர்களுக்கு ஜப்பானின் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், விளையாட்டு வீரர்களும் குழுவினரும் ஜப்பானுக்கு வருகை தருவதற்கு 72 மணி நேரத்திற்குள் கொரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வெளிநாட்டிலிருந்து வரும் பார்வையாளர்கள் குறித்த முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என ஒலிம்பிக் அமைப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறெனினும், ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான சுகாதார ஆலோசனை விபரங்களை மேலும் தயாரிக்க வேண்டும் என டோக்கியோ 2020 ஒலிம்பிக் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை 2021 ஜூலை 23 தொடக்கம் ஓகஸ்ட் 8ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






