இந்திய அணியின் தலைவரான கோஹ்லி நாடு திரும்பும் முன், தமிழக வீரரான நடராஜனிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோஹ்லியின் மனைவியான அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு இன்னும் சில நாட்களில் குழந்தை பிறக்கவுள்ளது.
இதனால் கோஹ்லி நாடு திரும்பவுள்ளார். நாடு திரும்புவதற்கு முன், முக்கியமாக விளையாடும் 11 வீரர்களிடம் நீண்டநேரம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் யார் எல்லாம் விளையாட வேண்டும், யார் எந்த இடத்தில் களமிறங்க வேண்டும் குறித்து கோஹ்லி பேசியுள்ளார். 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கே.எல் ராகுல், சுப்மான் கில், சிராஜ், ஜடேஜா ஆகியோரிடம் நீண்டநேரம் ஆலோசனை மேற்கொண்டார்.
அதேபோல் ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் கலக்கிய தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனின் பந்துவீச்சு விதத்தை கோஹ்லி பாராட்டியுள்ளார்.
டெஸ்ட் போட்டிக்கான வலைப்பயிற்சியில் நடராஜனின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் அவரை கோஹ்லி பாராட்டியுள்ளார் அதுமட்டுமின்றி நடராஜனிடமும் அவர் நீண்ட நேரம் பேசினாராம்.
அப்படி அவர் பேசும்போது இந்த டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு வந்தால் விளையாட தயாராக இருக்கும்படி நடராஜனிடம் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.






