பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் ஒமைக்ரான் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்நிலையில், கரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி சுகாதார கட்டமைப்பு திறனை மேம்படுத்தி கொள்ள உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒமைக்ரான் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளதால், அதனுடனான எல்லை பகுதிகளை மற்ற நாடுகள் மூடியுள்ளது. இருப்பினும், ஆஸ்திரேலியாவில் ஒமைக்ரான கரோனா கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக, அமெரிக்காவில் ஐந்து பேருக்கு ஒமைக்ரான் இருப்பது உறுதியானது.
ஆசிய நாடுகளில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை உருமாறிய கரோனா கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரானை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆனால், எல்லைகளில் கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலமாக மட்டும் ஒமைக்ரானை கட்டுப்படுத்தி விட முடியாது என உலக சுகாதார அமைப்பு ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இணைய செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் மேற்கு பசிபிக் பிராந்திய இயக்குநர் டக்கேஷி கசாய், “மக்கள் எல்லை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மட்டும் நம்பக்கூடாது.
மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அதிக பரவல் தன்மை கொண்ட இந்த புதிய வகை கரோனாவை எதிர்கொள்ள தயாராக வேண்டும். இதுவரை கிடைத்த தகவல்கள் எங்களின் அணுகுமுறையை மாற்ற வேண்டியதில்லை என்று தெரிவிக்கிறது” என்றார்.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கிடையே தடுப்பூசி விகிதம் பெரிய அளவில் மாறுபடுகிறது என்றும் அது கவலையளிக்கும் விதமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் நான்காவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தோனேசியா, ஒரு கட்டத்தில் ஆசியாவின் கரோனா மையமாக இருந்ததது. 270 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டில் 35 சதவிகதத்தினர் மட்டுமே தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
இன்னும் சில மாதங்களில், உலகில் அதிக அளவில் பரவும் கரோனா வகையாக ஒமைக்ரான் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது என அவுஸ்திரேலியாவின் தலைமை மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார்.






