புதிய ஏவுகணைத் தாக்குதலால் உக்ரைன் முழுவதும் மின்விநியோகம் தடைப்பட்டுள்ள நிலையில். ரஷ்யா “மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வெலோடிமீர் ஷெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் பயங்கரவாத சூத்திரத்தால் மில்லியன் கணக்கான மக்கள் மின்விநியோகம் இன்றியும் வெப்பமூட்டல் வசதி மற்றும் நீர் இல்லாமலும் இருப்பதற்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா பாதுகாப்பு பேரவையில் காணொளிக் காட்சி ஊடாக ஆற்றிய உரையில் அவர் கூறியுள்ளார்.
ஐ.நா பாதுகாப்பு பேரவையில் உரை
ரஷ்யா மேற்கொண்ட புதிய ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. அத்துடன் அணுமின் நிலையம் ஊடான மின்விநியோகமும் செயலிழந்துள்ளது.
ஐரோப்பாவில் மிகப் பெரிய அணுமின் உற்பத்தி நிலையமான சப்போறிஸ்ஷியாவின் மூன்று அணு உலைகளுக்கு பிரதான மின் விநியோக கட்டமைப்பில் இருந்து வழங்கப்பட்ட மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக அணுஉலையின் குளிரூட்டும் அமைப்புகள் மற்றும் முக்கிய பாதுகாப்பு உபகரணங்களை குளிரூட்டுவதற்கு டீசல் மின்பிறப்பாக்கிகளையே நம்பியிருக்க வேண்டிய கட்டயாம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள சப்போறிஸ்ஷியா அணுமின் உற்பத்தி நிலையம் குறித்து ஐ.நாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு தனது கவலையை வெளியிட்டுள்ளது.
அயல்நாடான மோல்டோவாவும் நேற்று புதன்கிழமை பெரும் மின்தடையை எதிர்கொண்டிருந்தது.






