பிரித்தானியாவில் பாடசாலை மாணவன் ஒருவன் நண்பர்களிடம் மறந்துவிட வேண்டாம் என உருக்கமாக பேசிவிட்டு, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் நீதிமன்ற விசாரணை துவங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் சர்ரே பகுதியை சேர்ந்த 14 வயதேயான சாம் கானர் செர்ட்சி ரயில் நிலையத்தில் கடந்த 2019 ஜூலை 15 அன்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக தற்போது நீதிமன்ற விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சாம் கானர் 9 வயதாக இருக்கும் போதே, தமது நண்பர்களிடம் தற்கொலை செய்து கொள்வது தொடர்பில் விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேப்போன்று, சம்பவத்தன்று தமது நண்பர்களிடம் தற்கொலை செய்து கொள்வது தொடர்பில் மீண்டும் கிண்டலாக பேசியதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, தமது மிக நெருக்கமான நண்பர்கள் சிலரிடம், நான் போய் வருகிறேன், என்னை மறந்துவிட வேண்டாம் என குறுத்தகவலும் அனுப்பியுள்ளார்.
ஆனால், தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டிய சிறுவன் அல்ல சாம் கானர் என பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சாம் தொடர்பில் பாடசாலையில் உடனடியாக ஒரு விசாரணை முன்னெடுக்கப்பட்டதாகவும், உறுதியான காரணம் எதுவும் தங்களால் அறிந்து கொள்ள முடியவில்லை எனவும் பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சாம் எப்போதும் கவலையுடனே இருப்பதாக அவனது தாயார் பாடசாலை நிர்வாகத்தினருக்கு அளித்த தகவலை அடுத்து, உளவியல் ஆலோசனை வழங்கும் பட்டியலில் சேர்த்துள்ளனர். ஆனால் காத்திருப்போர் பட்டியல் அது என பின்னர் தெரிய வந்தது.
சாம் கானர் தமது நண்பர்களிடம் கனிவாகவும், கலகலப்பாகவும், மிகுந்த அக்கறையுடனையுமே இருந்துள்ளான்.
எப்போதும் தம்முடன் இருக்கும் நண்பர்களை சிரிப்பூட்டி மகிழ்விக்கும் குணம் கொண்டவன் சாம் கான்ர் என்றே சக மாணவர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, நண்பர்களுடன் ஸ்பெயின் நாட்டுக்கு விடுமுறை காலத்தை கழிக்கவும் சாம் கானர் திட்டமிட்டுள்ளான்.
ஆனால், இதுவரை சாம் கானர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதன் மர்மம் என்னவென பாடசாலை மாணவர்கள் எவருக்கும் தெரியவில்லை என்றே கூறப்படுகிறது.






